தமிழகத்தின் பிரம்மாண்ட விழாக்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் தீபத் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெரிவிக்கையில், “திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று மலை மீது ஏற முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 ஆயிரத்து 500 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். மலை மீது ஏறும் பக்தர்கள் கற்பூரம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 900 பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, பக்தர்களை அழைத்து வர 150 சிறப்பு பேருந்துகள் கட்டணமின்றி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.