'மக்களுக்கு நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்' என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது தனது தண்டனை காலத்தை நிறைவுசெய்த நிலையில், இன்று (08/02/2021) காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பியுள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார். அவரது வருகையையொட்டி தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரும்வழியில் பல்வேறு இடங்களில் அவரின் தொண்டர்கள் கார் மீது பூத்தூவி வரவேற்றனர். தற்பொழுது அவர், திருப்பத்தூர் மாவட்டம், நெக்குந்தி டோல்கெட் வந்தடைந்தார். அங்கு அவருக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது காரில் இருந்தபடி பேசிய சசிகலா, "கழகம் எத்தனையோ முறை சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம். விரைவில் அனைவரையும் சந்திப்பேன்; நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. உங்கள் அன்புக்கு நான் அடிமை. அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கொடியை நான் பயன்படுத்தியது குறித்து அமைச்சர்கள் புகாரளித்தது அவர்களின் பயத்தையே காட்டியது" என்றார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையான பின் முதன்முறையாக செய்தியாளர்களிடம் சசிகலா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.