சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் என தெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தமிழகம் வருவார் என நேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.
பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட, போஸ்டர், பேனர் வைத்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று (05.02.2021) தென்காசியில் திருமலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கையில், “தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார். டிஜிபியிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.” என்றார்.