திரைக்கு வரும் முன்பே கதை திருட்டு என்று பிரச்சனை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய சர்க்காருக்கு விலையில்லா விளம்பரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.
திரைக்கு வந்த வந்த பிறகு தற்போது தமிழக அமைச்சர்கள் முதல் ஆளுங்கட்சியினரும் விலையில்லா விளம்பரம் கொடுத்துவருகின்றனர். இதனால் வணிகரீதியிலான விளம்பரம் செய்து வரும் அமைச்சர்களுக்கு அமைதியாகவே நன்றி சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தான் அரசாங்கம் பற்றிய காட்சிகளை அகற்ற வேண்டும் இல்லை என்றால் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர்ராஜூ பேட்டி கொடுத்தார். இன்று மதுரையில் தொடங்கி கோவை வரை திரையரங்கம் முற்றுகை போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை நகரில் சர்கார் ஓடும் திரையரங்குகளுக்கு மாலை சில அதிகாரிகளுடன் சென்ற புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சி குமார்.. திரையரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டிக்கெட்களை ஆய்வு செய்தார். பிறகு டிக்கெட் அதிகவிலைக்கு விற்பதாக வந்த தகவலையடுத்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சரியான விலைக்கே விற்கிறார்கள். ஆனால் ஆன்லைன்ல அதிகவிலைக்கு விற்றது பற்றி எங்களால் கண்டுபிடிக்க முடியல. அதனால பரிசீலனை செய்து ஆன்லைன் பதிவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு சென்றார்.
தமிழக அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் சர்காருக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனால் புதுக்கோட்டையில் எப்பவுமே வித்தியாசமாக சிந்திக்கும் ஆளுங்கட்சி பிரமுகர் நேரடியாக எதையும் செய்யாமல் இப்படி அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். அது போல தான் இன்றும் டிக்கெட் விலை ஏற்றம் என்று சொல்லி ஆய்வுக்கு அதிகாரிகளை அனுப்பி திரையரங்குகளுக்கு முதல்கட்ட எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். கடந்த 3 நாட்களாக அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் போதெல்லாம் போகாத அதிகாரிகள் இன்று ஏன் போகனும். ஆனால் அதிகாரிகள் போன நேரத்தில் சர்ச்சைக்குறிய சில காட்சிகளை நீக்க திரைப்படக்குழு ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால் நடவடிக்கை ஏதுமின்றி அதிகாரிகள் திரும்பியுள்ளனர். தமிழக அரசு நினைக்கு காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் தமிழகத்தில் சர்கார் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் ஏதாவது காரணம் சொல்லி சோதனைகளும் நடவடிக்கைகளும் பாய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்த புதுக்கோட்டை மக்கள்.