தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க, சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா? அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''யாருக்கும் எதற்கும் போஸ்டர், பேனர், கட்டவுட் பொது இடங்களில் வைக்கக் கூடாது என்னும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தமிழகமெங்கும் அமல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. இந்நிலையில் சுபஸ்ரீ என்கின்ற கம்ப்யூட்டர் எஞ்சினியர் சென்னைப் புறநகர் ஒன்றில் பேனர் விழுந்து பலியானார். அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்காக வைத்த பேனர் அது. ஆனால் அந்த அதிமுக பிரமுகர் 10 நாட்களுக்கு மேலாகியும் கைது செய்யப்படவேயில்லை. இதனைத் தமிழகமே ஒருசேரக் கண்டித்தது. அதன் பின்னரே வேறு வழியின்றி அவர் கைதுசெய்யப்பட்டார்.
ஆனால் அவரைக் கைது செய்வதற்கு முன்பாகவே, “பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகைக்கு பேனர்கள் வைக்கக் கேட்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் சேர்ந்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக” அறிவித்தன. அங்கு இவர்களின் மனு இன்று விசாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் தாயாரே, “பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க வேண்டி, நீதிமன்றத்திற்கே சென்று சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா? சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
அவரது கேள்வி முற்றிலும் நியாயமானதே. இந்தக் கேள்வியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் எழுப்புகிறது. அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா என்று கேட்பதுடன், மோடிக்கு பேனர் வைக்க, ஒன்றிய அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் நீதிமன்றம் சென்றது, மோடியின் சர்வாதிகாரத்திற்கே துணைபோனதாகும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்.
எனவே சனநாயகத்திற்கு எதிரான அதிமுக அரசின் இந்த செயலைக் கண்டிப்பதுடன், அதனைக் கைவிடக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி''. இவ்வாறு கூறியுள்ளார்.