சேலம் அருகே, திருமண உதவித்திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிய ஒரு பவுன் தங்கத்தை பெற்றோர் வீட்டில் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டார், இளம்பெண்ணை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (28). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஸ்வரி (21). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புவனேஸ்வரி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 22, 2018) இரவு, புவனேஸ்வரி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார்.
கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர்.
திருமணம் ஆன ஓராண்டிற்குள் தற்கொலை செய்திருப்பதால் இதுகுறித்து மேட்டூர் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) லலிதா, நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்தின் கீழ் கிடைத்த ஒரு பவுன் தங்க காசை புவனேஸ்வரி, கடந்த சில நாள்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அந்த தங்கக் காசை அவர் தனது பெற்றோரிடம் கொடுத்துள்ளார்.
இதை அறிந்த ராஜவேல், அவருடைய தாய் பழனியம்மாள், தந்தை ஆகியோர், 'எதற்காக தங்க காசை உன் பெற்றோரிடம் கொடுத்தாய்?' என்று கேட்டு கடுமையாக திட்டியுள்ளனர். உடனடியாக அந்த ஒரு பவுன் தங்கத்தை வாங்கி வந்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவும் அவரை கணவர் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர்கள், கயிற்றால் புவனேஸ்வரியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ராஜவேல், அவருடைய பெற்றோர் ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண்ணை கொலை செய்திருப்பது ஜலகண்டாபுரம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.