தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொழில் நகரம் மட்டும் மல்ல, ஆன்மீக நகரமும் கூட. மூன்று பெரிய சன்னதிகளைக் கொண்ட ஸ்ரீசங்கர நாராயணரின் மிகப் பெரிய ஆலயம் புகழ் பெற்ற தொன்மை வாய்ந்தது. அன்றாடம் வழிபாடு பொருட்டு பக்தர்களின் கூட்டம் திரளுவதுண்டு அதே போன்று சாமியார்களும் வந்து செல்வதுண்டு.
இந்நிலையில் நேற்றைய தினம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வருவதாகச் சொல்லிக் கொண்ட நிர்வாண சாமியார் ஒருவர் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டும் ஜடா முடியோடும் உடன் இரண்டு காவிச் சாமியார்களுடன் புனித யாத்திரையாக ராமேஸ்வரம் கன்னியாகுமரி செல்கிற வழியில் சங்கரன்கோவில் வந்தார். அது சமயம் நகரின் மெயின் சாலையில் உள்ள தனியார் நகைக் கடையின் உள்ளே சென்ற நிர்வாண சாமியார் குழு, ‘தான் ஹரித்துவாரிலிருந்து வருவதாகவும், இந்தப் பகுதியைக் கடக்க முயன்றபோது திடீரென்று எனக்கு கடவுள் அருள் வாக்கு கேட்டுது. உங்கள் நகைக் கடைக்குள் சென்று ஆசீர்வாதம் செய்துட்டுப் போன்னு கூறியது. அதனால உங்கள ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கேன்’ என்று பேச்சை விட்டிருக்கிறார் நிர்வாண சாமியார்.
இதைக் கண்ட கடை உரிமையாளருக்கு டன் கணக்கில் அதிர்ச்சி. ஊழியர்களும் செய்வதறியாமல் திகைத்தனர். சமாளித்துக் கொண்ட கடை உரிமையாளர், சாமியாரைக் கும்பிட்டு பவ்யமாக வரவேற்று அமரச் செய்தார். அது சமயம் கடைக்கு வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து கும்பிட்டு ஆசி பெற்றுள்ளனர். உரிமையாளரும் வழி செலவிற்காக ஒரு சிறிய தொகையை கவருக்குள் வைத்து அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். ‘அப்பனே இது என்னோட பூஜைக்குரிய செலவாகும். என்னோட முழு ஆசீர்வாதம் உனக்கு கிடைத்தால் இந்த ஊரிலேயே மிகப்பெரிய ஆளாய் வருவாய் பின்பு நான் உன்னை ஆசீர்வாதம் செய்கிறேன்’ என்று சொன்ன நிர்வாண சாமி, உரிமையாளரை கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்குச் செல்லுமாறு சொன்னவர் அது சமயம் பின்னால் வந்த நிர்வாண சாமி உரிமையாளரின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.
சுற்றிக் கண்களை ஓடவிட்ட நிர்வாண சாமி, ‘அப்பனே, நான் கழுத்தில் அணிய தங்கச் சங்கிலி வேண்டும்’ என்று உரிமையாளரிடம் கேட்க, திகைத்துப் போன உரிமையாளரோ, சுதாரித்துக் கொண்டு ஒரு பவுன் அளவுள்ள தங்கச் செயினை எடுக்க, அது வேண்டாம் அந்த பெரிய செயினை எடு என்றிருக்கிறார் நிர்வாண சாமி. சாமி, இந்தச் செயின் ஒருவரின் ஆர்டரின் பேரில் செய்யப்பட்டது. அதனால இதையே வைத்துக் கொள்ளுங்கள் என்ற உரிமையாளர் ஒரு பவுன் மதிப்புள்ள செயினையே சாமியாரின் கழுத்தில் அணிவித்திருக்கிறார். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாண சாமியார் தங்கச் செயின் மற்றும் பணத்துடன் தன் சக காவிச் சாமியார்களுடன் வெளியேறியிருக்கிறார். முற்றும் துறந்த சாமியார் இப்படியா என்ற அதிர்விலிருந்து கடை உரிமையாளரும், ஊழியர்களும் இன்னமும் மீளவில்லையாம். இந்த சம்பவம் மின்னலாய் நகரில் பரவி பரபரப்பைக் கிளப்பி வைரலாகி இருக்கிறது. பக்தியைக் காட்டியே பகல் வேஷம் போட்டு பாமர மக்களை வலையில் வீழ்த்தும் போலிச் சாமியார்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை.