"அரசு குவாரிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதால்தான் மணல் விலை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேள தலைவர் ராசாமணி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
"சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி, அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைப்பதில்லை. ஒரு யூனிட் மணல் தங்கத்தின் விலைக்கு சமமாக 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு விற்றதை விட கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு யூனிட் மணல் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுக்கு முன்பு மாநிலம் முழுவதும் 50- க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் இயங்கி வந்தன. தற்போது தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இரு அரசு மணல் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இங்கு தினசரி ஒரு யூனிட் மணல் 1995 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அரசு மணல் குவாரிகளில் நடந்து வரும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். உடனடியாக, மாநிலம் முழுவதும் அதிக குவாரிகளை திறக்க வேண்டும். அரசு வேலை, பொது வேலை என்று தனித்தனியாக இணையதளத்தில் பதிவு செய்யாமல் ஒரே இணையதளம் மூலம் அனைத்து லாரிகளுக்கும் பதிவு செய்து, பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும்.
மணல் குவாரி முறைகேடுகள் குறித்து திட்ட இயக்குநர் அருண் தம்புராஜிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசே, லாரிகளுக்கு உரிய கிலோமீட்டர் வாடகை நிர்ணயித்தால், அந்த வாடகைக்கு மணல் லாரிகளை இயக்க தயாராக இருக்கிறோம்" இவ்வாறு ராசாமணி கூறினார்.