கரோனா வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் விழிபிதுங்கி நிற்கிறது. பொது முடக்கத்தால் ஏழை முதல் பணக்காரர்கள் வரை இனி என்ன நடக்குமோ என்கிற பீதியில் உறைந்து கிடக்கின்றனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் படுபாதாளத்தில் கிடக்கிறது. இப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையில், எந்தவித அச்சமும் இல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட 32 லாரிகள் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
காட்டுமன்னார்குடி அருகே உள்ள முட்டத்திற்கும், மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேட்டிக்கும் இடையே உள்ள கொள்ளிடம் பாலத்தில் இரவு சாரை சாரையாக லாரிகள் விரைந்து செல்வதை, இரவு காவல் பணியில் இருந்த காவலர்கள் சிலர் கவனித்து அந்த லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கரோனா பொது முடக்கத்திலும் இப்படி ஒரு கொள்ளையா என அதிர்ச்சியோடு அத்தனை லாரிகளையும் மணலோடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். காட்டுமன்னார்குடி காவல் நிலையத்திலிருந்து எம்.ஆர்.கே. கல்லூரி வரை வரிசையாக லாரிகள் நிற்பதை ஒட்டுமொத்த காட்டுமன்னார்குடி மக்களும் வாய்பிளந்து பார்க்கின்றனர்.
இது குறித்து காவல்துறையிடம் விசாரித்தோம், "தஞ்சை மாவட்டம் கும்பகோணம், அனைக்கரை பகுதியில் இருந்து நள்ளிரவில் மணல் கடத்தி செல்வதாக எங்களுக்கு ஏற்கனவே பலமுறை தகவல் வந்தது. ஆனால் காவலர்கள் பற்றாக்குறையால் மற்ற பணிகளுக்கே நேரம் சரியாக இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் ஐம்பது லாரிகள் மணல் கடத்திவருவதாக எங்களுக்கு தகவல் வந்ததையடுத்து தயாராக காத்திருந்து பிடித்தோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகராக இருந்துவரும் குடவாசல் எம்.ஆர், ராஜேந்திரனின் உறவினரான அரவிந்த் என்பவர் அங்குள்ள காவல்துறையை சரிகட்டி, கள்ளத்தனமாக கரோனா பொது வேலை முடக்கத்திலும் மணல் கொள்ளையடிக்கிறார். இரண்டு முறை அவர்களை கண்டித்து விட்டோம். மூன்றாவது முறை பிடித்துவிட்டோம், வழக்குப் போட இருக்கிறோம்" என்கிறார்கள்.
இதற்கு இடையில் காவல்துறையில் உள்ள மேல்மட்ட அதிகாரிகள் மூலம் வழக்கு போடாமல் சரி கட்டுவதற்கான பேரம் பேசும் வேலையும் நடந்து வருவதாக, அங்கு உயிரை பணயம் வைத்துபிடித்த கடைநிலை காக்கிகள் கிசுகிசுக்கின்றனர். ஊரடங்கால் அடுத்தநாள் உணவுக்கு வழியின்றி எத்தனையோ உயிர்கள் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் போய்க்கொண்டிருக்கிறது. வேலையில்லாமல் பசியால் உயிர் இழந்த தாயை எழுப்பும் அவலத்தை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் வெட்கித் தலைகுனிந்துள்ளது, ஆனால் சோறுபோடும் பூமியை, ஊரடங்கிலும் கூறுபோடும் மணல் மாஃபியாக்களின் மணல் கொள்ளையும் அமைதியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.