கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சொந்தமான கேந்திரா கடற்கரை வளாகத்தில் 12 ஏக்கா் நிலம் தானமாக வெங்கடாசலபதி கோவில் கட்ட வழங்கப்பட்டது. அதன் படி அந்த இடத்தில் 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி கோவில் கட்டப்பட்டது. இதன் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்தது.
பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா வருகிற 27-ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இதற்கு முன்னதாக 21-ம் தேதி 40 அடி உயரம் கொண்ட கொடிமரம் பிரதிஷ்டை நடக்கிறது. மேலும் கோவிலின் மூலஸ்தான விமான கோபுரத்தில் அமைப்பதற்கான கும்ப கலசம் நேற்று திருப்பதியில் இருந்து லாறி மூலம் கொண்டு வரப்பட்டது.
இதே போல் திருப்பதி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அதே நாளில் அதே நேரத்தில் தான் நடக்கும் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தா்களுக்கு தினமும் திருப்பதி போன்று அதே சுவையுடன் லட்டு கொடுப்பதற்காக திருப்பதியில் இருந்து ரயிலில் கண்டெய்னா்களில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 30-ம் தேதி காலையில் வெங்கடாசலபதி சிலையின் பாதம் முதல் தலை வரை சூரிய ஓளி விழும் விதத்திலும் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன்னே கோவிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளி மாநில மக்கள் வந்து செல்கின்றனா். கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி கோவில் நிர்வாகிகள் இந்த கோவிலை பார்வையிட்டனர்.