சேலம் - விருத்தாசலம் மின்வழித்தட பாதையில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 28) நடந்தது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையை 136 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்மயமாக்கும் பணிகள் 200 கோடி ரூபாயில் நடந்து வந்தது. கடந்த ஓராண்டாக நடந்து வந்த இப்பணிகள் அண்மையில் முடிவடைந்தது.
இதையடுத்து, மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் அதிவேக ரயில்களின் சோதனை ஓட்டம் நடத்தி, சான்றிதழ் அளிக்க பாதுகாப்பு ஆணையருக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான குழுவினர் மேற்பார்வையில், சேலம் - விருத்தாசலம் மின் வழித்தடத்தில் அதிவேக ரயில்களின் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (2021, டிச. 28) நடந்தது.
சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு சிறப்பு ரயிலில் சென்று பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் சோதனை ஓட்டத்தை நடத்தினர்.
சத்திரம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மின்சார கேபிள்கள், மின் நிலையங்கள், கம்பங்களை ஆய்வு செய்தனர். மாலையில் விருத்தாசலம் சென்றடைந்தனர்.
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் மேத்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர். இரண்டு நாள்களாக இந்த சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த வழித்தடத்தில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் மின்சார ரயில் இன்ஜின் கொண்ட ரயிலை இயக்கலாம் என பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் அளிப்பார் என்றும், அதன் அடிப்படையில் மின்சார ரயில்கள் சேவை தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.