விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ளது தைலாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 49வயது சங்கர். இவரது மனைவி 45 வயது பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கர் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சில நேரங்களில் சங்கர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்திருக்கிறார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு பெரும் சிரமம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுமார் எட்டு மணி அளவில் வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாக்கியலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியலட்சுமியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிளியனூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு பாக்கியலட்சுமியை கொலை செய்த அவரது கணவர் சங்கரை கைது செய்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.