அண்மை காலமாக சாமியார் நித்யானந்தா சொல்லும் விஷயங்கள் அவரது சிஷ்யர்களுக்கே அவர் சொல்லுவது உண்மையா பொய்யா என சந்தேகப்படும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனது கட்டளையைக்கேட்டு சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்பது முதல் மேட்டூர் அணை நடுவே உள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன் என்பது வரை அவர் வெளியிட்ட அனைத்து வீடியோக்களும் இணையத்தில் ட்ரோல் ஆகிவரும் நிலையில், தற்பொழுது நித்யானந்தா மீது சிலையை திருடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தா வெளியிட்ட யூடியூப் வீடியோவில் மேட்டூர் அணையில் நீர் வற்றினால் நந்தி சிலை ஒன்று வெளியே தெரியுமே அந்த சிலையை கொண்டுள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன். அந்த சிவன் கோவிலின் மூலவரான சிவ லிங்கம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில் பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லிங்கத்தை நித்யானந்தா திருடி சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் திருடிய லிங்கத்தை மீட்டு தரும்படி மேட்டூர் அருகே கொளத்தூர் காவல் நிலையத்தில் பாலவாடி வேலுசாமி, சக்திவேல் என்பவர்கள் புகார் அளித்துள்ளனர்.