
சேலத்தில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வலை விரித்து காவலாளியிடம் 5.40 லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு மோசடி செய்த ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (44). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், அழகாபுரம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில். ''சேலம் ராஜாஜி சாலையில், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தேன். அப்போது புதிய பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த தனியார் முதலீட்டு நிறுவனத்தின் மேலாளர் தனசேகர் என்பவர் என்னிடம், பண முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி 2014ம் ஆண்டு, மாத தவணை வீதம் முதலீடு செய்தேன்.
மேலும் என்னுடைய உறவினர்கள் நடராஜன், மகேஸ்வரி, மணி, ஹேமலதா ஆகியோரிடமும் பணத்தைப் பெற்று அந்த நிறுவனத்தில் மொத்தம் 5.40 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். ஆனால் 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் எனக்கு அசல் தொகையும், வட்டியும் தராமல் தனசேகரும், அவருடைய கூட்டாளி ஆனந்தன் என்பவரும் ஏமாற்றி வருகின்றனர்'' என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து காவல் ஆய்வாளர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். தனசேகர், ஆனந்தன் ஆகியோர் மீது மோசடி,கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆத்தூரைச் சேர்ந்த அவர்களை தேடி வருகின்றனர்.