சேலத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
சேலம் மாநகரம் மற்றும் மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் சாதாரண வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை, கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், டெங்கு, பன்றி காய்ச்சலால் இறப்போரின் எண்ணிக்கையும் தொடர்கிறது. இது, பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலியான சம்பவம், நோய்த்தடுப்புத்துறை செயல்பாடுகள் மீது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அம்மாபேட்டை பட்டா நாயக்கர்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி கலா (55). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. கலாவிற்கு கடந்த வியாழன் அன்று, திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்ததால், அதற்குரிய தனிப்பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை (டிச. 10) இரவு கலா உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூனாண்டியூரைச் சேர்ந்த வளர்மதி என்பவருக்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி வளர்மதியும் திங்கள்கிழமையன்று இரவு இறந்தார்.
தற்போதைய நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கான தனிப்பிரிவில் 12 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.