சேலம் நாராயண நகர் காந்தி மகான் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் கடந்த அக். 6ம் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். சூர்யாவின் கூச்சல் ஓசையைக் கேட்டு அங்கு வந்த பொதுமக்களிடமும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அந்த மர்ம நபர் தப்பினார்.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் தெருவைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் மாட்டுத்தீனி என்கிற விக்னேஷ்ராஜ் (23) என்பது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது அஸ்தம்பட்டி, அழகாபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும் வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி விக்னேஷ்ராஜை குண்டாசில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர்.