சேலத்தில் கடந்த இரு நாள்களில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 230 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. நல்வாய்ப்பாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்கும் நோய்த்தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை 1400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்ற 10 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, கரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 2 மணி நேரத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணங்களுக்கு இந்திய அரசு, சீனா நாட்டு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளது. இவற்றில், முதல்கட்டமாக இரு நாள்களுக்கு முன்பு 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசு தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு 12 ஆயிரம் கிட்டுகள் கிடைத்துள்ளன.
இவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டது. இந்தப் புதிய உபகரணம் மூலமாக கரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனைகள் கடந்த இரு நாள்களாக சேலம் அரசு மருத்துவமனையில் நடந்து வருகிறது. நகர்ப்புறத்தில் இருந்து 100 பேர், மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த 130 பேர் என இரண்டு நாள்களில் 230 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு ஹாட் ஸ்பாட் இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து வருகிறோம். இவர்கள் தவிர சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்களுக்கும் பரிசோதனை செய்கிறோம்.
இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 230 பேரில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.