ஒயிலாட்டக்கலைக்கு உயிர் கொடுத்து, 50 ஆண்டுகாலம் அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி நேற்று (ஜூலை 10) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
"கார்பரேஷன் குழாயிலே வாட்டரைக் காணாம், ஆபரேசன் தியேட்டருலே டாக்டரைக் காணாம்.." இப்படி சமூக அவலத்தை தனது நூற்றுக்கணக்கான பாடல்களின் மூலம் தமிழக வீதிகள் முழுக்க பயணம் செய்தவர் கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி. தூத்துக்குடியை சேர்ந்த கைலாசமூர்த்தி அரசு ஊழியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அரசு ஊழியராக இருந்தாலும் அவரது உயிர் மூச்சாக இருந்தது ஒயிலாட்ட கலைதான்.
காலத்தால் மறைந்து போகாத மண்ணின் கலை என்றால் அது ஒயிலாட்ட கலைதான். தமிழ் நிலப்பரப்பில் அதை வாழவைத்து அந்த கலையை அழியாமல் காப்பாற்றியதோடு, ஆயிரக்கணக்கான மாணவர்களை, இளைஞர்களை தமிழகம் முழுக்க ஒயிலாட்ட கலைஞர்களாக உருவாக்கியவர் கலைமாமணி கைலாச மூர்த்தி.
இடதுசாரி இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பற்றுள்ளவர். அரசு ஊழியராக இருந்த காரணத்தினால், கட்சி உறுப்பினராக அப்போது இல்லை. ஆனால் கட்சியின் துணை அமைப்புகளான இந்திய ரஷ்ய நட்புறவுக் கழகம், தொழிற்சங்கம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தொடர்ந்து பயணித்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகள், தொழிற்சங்க மாநாடுகள், கலை இலக்கிய பெருமன்ற நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து மாநாடுகளிலும் மேடையில் இவரது ஒயிலாட்ட நடனமும், பாடலும் இல்லாமல் இருக்காது. தமிழகம் முழுக்க எங்கெல்லாம் கட்சி அல்லது துணை அமைப்புகளின் நிகழ்ச்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் ஒயிலாட்ட கலையை மேடை ஏற்றியவர்.
அப்படிப்பட்ட இவரை தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. 70 வயதை கடந்தாலும் தொடர்ந்து கலைத்துறையில் பயணித்து வந்தார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில துணை தலைவராகவும் இருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு மேடையில், கைலாசமூர்த்தி கலை நிகழ்ச்சி நடந்தால் அதனை முழுமையாக அமர்ந்து பார்ப்பார். அதுமட்டுமல்லாமல் சில பாடல்களை கைலாசமூர்த்தியைப் பாடச் சொல்லி அதனை முழு ஈடுபாட்டுடன் கேட்பார்.
தமிழகத்திலுள்ள இடதுசாரி இயக்கங்கள், கலை இலக்கியவாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் என எல்லோராலும் அறியப்பட்ட கைலாசமூர்த்தி நேற்று (ஜூலை 10) மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
கைலாச மூர்த்தியின் இறப்பு ஒயிலாட்ட கலைக்கு பேரிழப்பு. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் அவரது குரலில், தமிழ் மண்ணில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அந்த ஒயிலாட்ட கலையை வாழ்வித்து தமிழகத்தில் நிலை நிறுத்துவார்கள் என்று அவரது தோழர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.