பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15, 2019) ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களின் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தால் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது. இச்சம்பவத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதால், முக்கிய குற்றவாளிகள் மேலும் சிலரை தப்பிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இச்சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பரவலாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை அளிக்கக்கோரியும் சேலத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 15, 2019) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மாணவ, மாணவிகளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை, தமிழக அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரினர். இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ''தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தும் இதுபோன்ற சமூக விரோதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
அதேபோல் சேலம் மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பு, வழக்கறிஞர்கள் சார்பிலும் பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்து, அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர்.