கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் சேலத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார் மற்றும் வீச்சரிவாள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் ஏப். 26ம் தேதி இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே சாலையோரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் காரை நெருங்கினர். அந்த காருக்குள் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர்.
இதனால் காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். அதில் இருந்து 2 வீச்சரிவாள், 3 கத்திகளைக் கைப்பற்றினர். இந்த சோதனை நடந்து கொண்டிருந்தபோதே காரில் இருந்த 5 பேரும் திடீரென்று தப்பி ஓடினர். ஏதோ அசம்பாவிதம் நிகழப்போவதை உணர்ந்த ரோந்து காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் அளித்தனர். துணை ஆணையர் லாவண்யா, உதவி ஆணையர்கள் அசோகன், ஆனந்தி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர்.
இதற்கிடையே, தப்பி ஓடிய கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், அந்த கும்பல் வந்த காரையும் பறிமுதல் செய்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோதுதான் அவர் லேசுபாசான ஆள் இல்லை என்பதும், கூலிப்படைத் தலைவன் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் தெரியவந்தது. அவர் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கொக்கி குமார் என்கிற குமார் (28) என்பதும் 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 22 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இவற்றில் நான்கு வழக்குகளில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளூர் காவல்துறையினர் அவரை தேடிக்கொண்டு இருப்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய நான்கு பேரும் தனது கூட்டாளிகள் என்றும் அவர்கள் சுடலைமுத்து, முத்து, சுந்தரபாண்டி, மாரி என்றும் கொக்கி குமார் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்காக காரில் சென்று கொண்டிருப்பதாக கொக்கி குமார் விசாரணையின்போது கூறியிருக்கிறார். என்றாலும், அதை காவல்துறையினர் நம்பவில்லை. சேலத்தில் யாரையாவது தீர்த்துக்கட்டும் திட்டத்துடன் கூலிப்படையாக வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
கொக்கி குமார் மீது பிடிவாரண்ட் உள்ளதால் அவர் சேலத்தில் பிடிபட்ட தகவல் நெல்லை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாழையூத்து காவல்துறையினர் ஏப். 26ம் தேதி சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் கொக்கி குமாரையும் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் வீச்சரிவாள்கள், கத்திகளையும் சேலம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அதேநேரம், தப்பி ஓடிய கொக்கி குமாரின் கூட்டாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.