நாமக்கல் மாவட்டம் எலந்தக்குட்டையைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். கடந்த மே மாதம் 27- ஆம் தேதி, சேலம் லீ பஜார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், கத்தி முனையில் அவரிடம் இருந்த 650 ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இச்சம்பவத்தில், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (32) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், மோட்டார் சைக்கிள் பறிப்புச் சம்பவத்திற்கு முதல் நாள் (மே 26) மட்டும் சேலம் ஜங்ஷன் அருகே ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகையையும், எடப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் மணிகண்டன் திருடிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.
ஏற்கனவே, கடந்த 2019- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மல்லசமுத்திரம் அருகே கூத்தம்பாளையம் பகுதியில் ஒருவர் வீட்டில் புகுந்து 11 பவுன் நகைகளும், சின்ன தம்பிபாளையத்தில் ஒருவர் வீட்டில் 8.5 பவுன் நகைகளும் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிறகும், மீண்டும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், சேலம் மாநகர காவல்துறையினர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் ஜூன் 15- ஆம் தேதி கைது செய்தனர். கைது ஆணை, குற்றவாளிக்கு நேரில் சார்வு செய்யப்பட்டது.
ஏற்கனவே, இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல்முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.