கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக இடைவெளியும் தனித்திருப்பதுமே சிறந்த மருந்து என்று கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் சமூகப் பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தொடங்கியதால், மாவட்ட எல்லையில் அவர்களைத் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, பின்பு மருத்துவப் பரிசோதனையை மருத்துவக் குழுவினர் செய்கின்றனர். பரிசோதனை முடிவுகளில் பெரும்பாலானோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று (04/05/2020) முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அமலுக்கு வந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து கரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. இது ஒருபக்கம் அச்சத்தை ஏற்படுத்தும் போது தமிழக அரசு 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்த மது பாட்டில்களைக் குடோனுக்கு மாற்றிய அதிகாரிகள் மீண்டும் கடைகளில் இறக்கி உள்ளனர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் டீ கடைகள் திறக்க அனுமதி இல்லை. பல குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைக்கு அனுமதியா? 40 நாட்கள் ஊரடங்கால் மது போதையை மறந்துள்ளவர்களை மீண்டும் குடிகாரனாக்கும் முயற்சியைத் தமிழக அரசு செய்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தொடங்கி தன்னார்வலர்கள் இளைஞர்கள் வரை எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மன்னார்குடி வழக்கறிஞர் ஆனந்தராஜ் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு அழைப்புக் கொடுத்திருந்தார். அதாவது டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இளைஞர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே கருப்பு முகக் கவசம் அணிந்து அரசுக்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று அழைத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்ற ஏராளமான இளைஞர்கள் டெல்டா மாவட்டம் முழுவதும் கருப்பு முகக்கவசம் அணிந்து இன்று (05/05/2020) காலை முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் ஆனந்தராஜ் கூறும் போது, "ஒட்டு மொத்த மக்களும் ஒரு வேலை சோற்றுக்கே தவிக்கும் போது டாஸ்மாக் கடை அவசியமா? அங்கே கூட்டம் கூடினால் கரோனா பரவாதா? அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக இப்படி மக்களை மறுபடியும் குடிகாரர்களாக மாற்றலாமா? பல குடும்பங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறது. அதைச் சீரழிக்கும் செயலைத் தமிழக அரசு செய்ய முன்வந்துள்ளது.
40 நாட்களாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களிடம் செலவுக்கே வழியில்லை. இந்த நேரத்தில் மதுக்கடையைத் திறந்தால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று அடகு வைத்து குடிப்பார்கள். குழந்தைகளின் தாயத்து முதல் பெண்களின் தாலிகள் வரை மதுக்கடைக்குப் போகும். அதனால் தான் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்கிறோம். அதன் முதல் கட்டமாகக் கருப்பு முகக் கவசம் அணியும் போராட்டதைத் தொடங்கியிருக்கிறோம். மீறி திறந்தால், பெண்களைத் திரட்டி சமூக இடைவெளியோடு நின்று கடைகளை முற்றுகையிட்டு போராடுவோம்" என்றார்.