சேலம் மாவட்டம் சித்தனூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த, சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜா, கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டார். இரண்டாம் கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று (டிச. 30) வாக்குப்பதிவு நடந்தது.
இந்த ஊராட்சியின் சில வார்டுகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தளவாய்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
அதன்படி, 3- வது வார்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 47ம் எண் (அனைத்து வகை வாக்காளர்கள்) வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த வார்டில் 476 வாக்காளர்கள் உள்ளனர். காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 194 பெண்கள் உள்பட மொத்தம் 401 பேர் வாக்களித்து உள்ளனர். வாக்குப்பதிவு முடிவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக தனபால் மகன் ராஜேஷ் (வரிசை எண் 6, ஏஎஸ்பி 0555110) என்பவர் வாக்களிப்பதற்காக அடையாள அட்டையுடன் அந்த வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார்.
பூத் சிலிப் மற்றும் அடையாள அட்டையை வைத்து வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தபோது அவருடைய வாக்கை முன்பே ஒருவர் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில், வரிசை எண் 7, ஏஎஸ்பி 1070168 என்ற எண்ணுள்ள நபர், ராஜேஷின் வாக்கை பதிவு செய்திருப்பதும், வாக்காளர் பட்டியலில் அந்த நபரின் பெயர் தனபால் மகன் ராஜா (26) என்று இருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வேட்பாளர் ராஜாவின் முகவர் ராம்குமார், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார். ஆனால், ராஜேஷூக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். மேலும், வாக்குப்பதிவு முடிவதற்கு சில நிமிடங்களே இருந்ததால், வாக்காளரின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்கும் போதிய நேரம் இல்லை என்றும் கூறினர். காவல்துறையினர், வாக்களிக்க வந்த இளைஞரையும் வெளியேற்றினர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
வாக்களிப்பதற்காக ஆர்வத்துடன் வந்த இளைஞர் ராஜேஷ், தனது வாக்கை மர்ம நபர் கள்ள வாக்காக பதிவு செய்ததால் ஏமாற்றம் அடைந்தார்.