அதிமுகவை பற்றி நினைக்கும்போது, 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்டா...' என்ற வடிவேல் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது என்று நடிகை கஸ்தூரி கிண்டலாக கூறினார்.
சேலத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10, 2019) சேலம் வந்திருந்தார். அப்போது அவர் ஊடகத்தினரிடம் கூறியது:
தமிழக அரசியலில் இரண்டு ஆண்டுகளாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சரியான ஆளுமை, தலைமை இல்லை. எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால்தான் கூட்டணியை பயன்படுத்துகின்றனர். ஆனால், கூட்டணியால் பெரிதாக பயனில்லை.
மக்கள் உடனான கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மக்களை நம்பாமல், மக்களைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்குள் குதிரை பேரம் பேசி வருவது வெட்கக்கேடான செயல்.
தமிழகத்தில் இப்போது காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்தான் மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும். இவற்றில் 10 தொகுதிகள்தான் அதிமுகவுக்கு பிரச்சனை. அதிமுகவை பற்றி நினைக்கும்போது, 'எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்டா,' என்ற வடிவேலின் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதேபோல, இரண்டு நாள்கள் முன்புவரை அதிமுகவினரை அடிமைகள் என்றும், அறிவில்லாதவர்கள் என்றெல்லாம் விமர்சித்த பாமக, அடுத்த நாளே அதிமுகவினரை விருந்துக்கு அழைக்கின்றனர். இவர்களும் சென்று சாப்பிட்டுவிட்டு வருகின்றனர்.
நேற்றுவரை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் எல்லாம் கூட்டணி என்றவுடன் சேர்ந்து கொள்கின்றனர். மேலும் கட்சி, தனிநபர் என்ற பாகுபாடு இல்லாமல் எதிரிகளை தன்வசம் சேர்த்துக் கொள்கின்றனர்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை 28 ஆண்டுகளாக சட்டப்படிகளை கடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வெளிப்படையாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது கோழைத்தனம். நடிகர் கமலை நடிகர் என்றில்லாமல் புதிய தலைவராக பார்ப்போம். அவர் சரியாக பேசுவதுபோல் தெரிகிறது. விஜயகாந்த், அரசியல் கட்சி தொடங்கியபோது அவர் மீது நம்பிக்கை இருந்ததுபோல் கமல் மீதும் நம்பிக்கை இருக்கிறது.
நடிகர் ரஜினி, புல்வாமாவில் நடந்ததை போர் என நினைக்காமல், தமிழ்நாட்டில் நடந்தால்தான் போர் என நினைக்கிறார். நேரடி அரசியலுக்கு வருவதைவிட வெளியில் இருந்து சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.