சேலத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் மழைநீர் தேங்கும் வகையில் சுற்றுப்புறத்தை போதிய பராமரிப்பின்றி வைத்திருந்த இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராமன் அதிரடியாக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
சேலம் மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மழைக்காலம் என்பதால், மாவட்டம் முழுவதும் நோய்த்தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் எந்த இடத்திலும் நீர் தேங்காவண்ணம் இருக்கவும், சுகாதாரமான குடிநீர் விநியோகம், குடிநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் குளோரின் மருந்து தெளிப்பதை உறுதிப்படுத்தவும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், ஆட்சியர் ராமன் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேலம் சோனா நகர் பகுதியில் புதன்கிழமை (அக். 9) நேரில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில், இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் நடந்து வந்தன. அந்த வளாகத்தை ஆய்வு செய்தபோது டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் காலி பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பழைய சாக்குப்பைகள் கிடந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தனியார் பள்ளி மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் கவனக்குறைவாக இருந்ததாகவும், நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதற்காகவும் அப்பள்ளி நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மிட்டாபுதூர், டிகே நகர், வி.சித்தாகவுண்டர் லைன், திருமால் நகர் ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
டெங்கு பரப்பும் கொசுக்கள் சுத்தமான நீரில்தான் உற்பத்தி ஆகிறது என்றும், வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீரை மூடிவைத்து பாதுகாக்க வேண்டும்; தண்ணீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டைகள், காலி பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், டயர், திறந்தநிலையில் இருக்கும் ஆட்டுரல் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். மேலும் நீர் சேமிக்கும் கலன்களை அடிக்கடி சுத்தம் செய்தும், தேவைப்பட்டால் சுண்ணாம்பு அடித்தும் பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன், மாநகராட்சி உதவி ஆணையர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் திலகா, உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், நித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.