தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும். உணவு பதப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 490 கோடி என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, அதேபோல் செலவு ரூ.2.04 லட்சம் கோடி என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.786 கோடி, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.8,916 கோடி, மானியம், உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.75,723 கோடி என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதால் தமிழக அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகியுள்ளது. காவல்துறை நலன் மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.7,877.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டுக்கான நிகர கடன் வரவு ரூ.47,888 கோடியாக இருக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் அறிவிக்கப்படும். தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் பேருக்கு தொழில் அனுபவம் வழங்கப்படும். காணாமல் போன 177 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2019-ம் மார்ச்சில் தமிழக அரசின் கடன் ரூ.3,55,845 கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.