ஆத்தூர் அருகே, ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பனந்தோப்பில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கும்படி விழாக்குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர். அதை பரிசீலித்த நிர்வாகம், விழா நடத்த அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, பனந்தோப்பில் ஞாயிற்றுக்கி-ழமை (மார்ச் 10, 2019) ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
ஆத்தூர் கோட்டாட்சியர் அபுல்காசிம் கொடியசைத்து, விழாவைத் தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் சின்னதம்பி, மருதமுத்து, கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மாடுபிடி வீரர்கள், அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தம்மம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், ராசிபுரம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்டன. 450 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் காளைகளை அடக்கினர். முன்னதாக காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
வாடிவாசல் வழியாக மூன்று குழுவாக பிரிந்து வீரர்கள் காளைகளை அடக்கினர். முன்னெச்சரிக்கையாக மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவக்குழுவினரும் வந்திருந்தனர்.
சிறந்த காளையின் உரிமையாளருக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
ஏடிஎஸ்பி அன்பு தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இப்போட்டியைக் காண சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.