சேலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே குழு மோதல் ஏற்பட்டது. அப்போது, அபுபக்கர் என்ற வாலிபரை இருவர் அடித்துக் கொன்றனர்.
இதுகுறித்து விசாரித்த அம்மாபேட்டை காவல்துறையினர், சிவாஜி நகர் வித்யா மந்திர் பள்ளி அருகில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் பால்மணி என்கிற மணிகண்டன் (31), வித்யா நகர் 8- வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கோமதுரை மகன் மணிகண்டன் (23) மற்றும் இவர்களின் கூட்டாளிகள் கவுதம், தீபக் என்கிற அஜீத் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் பால்மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு 28.10.2019ம் தேதி, காமராஜர் நகர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே சாபீர் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பால்மணியின் கூட்டாளியான மணிகண்டன் என்பவர், அதே நாளில் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் சுதாகர் என்கிற சுதா என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட பால்மணி, மணிகண்டன் ஆகிய இருவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததோடு அவர்கள் இருவரும் சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், அவ்விரு ரவுடிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆண்யைர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, பால்மணி, மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை, காவல்துறையினர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (டிச. 17) நேரில் சார்வு செய்தனர்.