சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியர்கள் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் காவல் பணிகள், ஆந்திராவைய் சேர்ந்த பத்மாவதி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மூலமாக 290 பெண்கள், 370 ஆண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு துறையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிரசவ வார்டில் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர்களில் சிலர், ஆண் கு-ழந்தை பிறந்தால் 500 ரூபாய், பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாய், நோயாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச்செல்ல 100 ரூபாய், சாப்பாடு டோக்கன் பெற்றுத்தர 50 ரூபாய் என பட்டியலிட்டு பணம் வசூலித்து வந்துள்ளனர்.
குறிப்பிட்ட சிலருக்கு ஒரே துறையில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு வந்துள்ளதும், ஒப்பந்த ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) ராஜேந்திரன், ஒப்பந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கர நாயுடு, பாதுகாப்பு அலுவலர் கரிகாலன் ஆகியோர் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நோயாளிகளிடமும் விசாரணை நடத்தினர்.
அதில், ஒப்பந்த ஊழியர்கள் அண்ணாமலை, குப்பம்மாள், பழனியம்மாள், கவிதா ஆகியோர் நோயாளிகளிடம் பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நால்வரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் ராஜேந்திரன் கூறுகையில், ''ஒப்பந்த ஊழியர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட மாட்டார்கள்,'' என்றார்.