Skip to main content

’உயர்கல்வியில் உலக அளவீட்டை கடந்துள்ளோம்’– மத்தியரசை மறைமுகமாக தாக்கிய தமிழக அமைச்சர்

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

 

ti


வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 26ந்தேதி நடைபெற்றது. இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஷித் கலந்துக்கொண்டு பட்டங்களை வழங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்களை பட்டப்பிரிவுகளில் 30,737 மாணவ மாணவிகளுக்கும், முதுகலை பட்டப்பிரிவுகளில் 6,305 மாணவ மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 1696 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 39,371 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் பெற்றனர்.


இவ்விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது,  வேலூர் பழங்கால நகரங்களில் ஒன்று. பாலாற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம். பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பீஜப்பூர் சுல்தான் ஆகியோர் வேலூரை ஆண்டுள்ளனர். விஜயநகர பேரரசின் காலத்தில் வேலூர் நகரம் தலைமையிடமாக செயல்பட்டது. இந்தபகுதி ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்தது. வேலூர் சிப்பாய் கலகம் வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இங்கு உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர்க்கு பெருமை சேர்க்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். 112 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற சிறப்பாகும். இப்பல்கலைக்கழகத்தை பொருத்தமட்டில் 7 முக்கிய துறைகளை உள்ளடக்கி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தில் பசுமையை பேணும் வகையில் பல்வேறு மூலிகை செடிகள் நடப்பட்டு தற்போது பசுமை வளாகமாக பல்கலைக்கழகமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

tii

 

இவ்வளவு சிறப்புமிக்க இப்பல்கலைக்கழகம் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய பின்தங்கிய மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது நான்கு மாவட்டங்களிலும் 130 கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளின் வாயிலாக ஏறத்தாழ 1,54,989 மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அனைவரையும் வாழ்த்துகின்றேன். இந்த பட்டங்களை பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைத்துள்ளீர்கள். அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல. விடாமுயற்சியினால் செய்யப்பட்டவைகளே என்பதை மட்டும் எப்போதும் மனதில் நிறுத்துங்கள். எண்ணங்கள் பெரிதாக இருந்தால் செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும். இது திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது. இதை நாம் வாழ்வில் கடைபிடித்து வெற்றி காண வேண்டும்.


தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பதனை இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அளவில் தற்போது 903 பல்கலைக்கழகங்கள், 39050 கல்லூரிகள், 10011 தனிப்பாடக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 58 பல்கலைக்கழகங்கள், 2472 கல்லூரிகள் உள்ளன. புதிய புதிய கல்லூரிகளைத் தொடங்கியதின் காரணமாக உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்திலும் தமிழ்நாடு உயர்வான நிலையைப் பெற்றுள்ளது.


உயர்கல்வியில் சேர்ந்து பயில்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதாவது ஆண்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 26.3 ஆகவும் தமிழ்நாடு அளவில் 49.1 ஆகவும் உள்ளது. பெண்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 25.4 ஆகவும் தமிழ்நாடு அளவில் 48.2 ஆகவும் உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 21.8 ஆகவும் தமிழ்நாடு அளவில் 42.1 ஆகவும் உள்ளது. பழங்குடி மாணாக்கர்களின் சேர்க்கை சதவிகிதம் இந்திய அளவில் 15.9 ஆகவும் தமிழ்நாடு அளவில் 40.5 ஆகவும் உள்ளது. மாணாக்கர்கள் சேர்க்கை விகிதத்தைப் பொருத்தவரை தற்போது இந்திய சராசரி 25.8 சதவிகிதமாகவுள்ளது. இதனை 2020-இல் 30 சதவிதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு அதையும் தாண்டி, ஏன் உலக சராசரியான 36 சதவீதத்தையும் தாண்டி, வளரும் நாடுகளுக்கும் மேலாக இப்பொழுதே 2017-2018 ஆம் ஆண்டிலேயே 48.6 சதவிகிதம் பெற்றுள்ளது என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கவர்னர் முன்பாகவே மத்தியரசின் உயர்கல்வித்துறையின் புள்ளிவிபரத்தை மறைமுகமாக தாக்கினார் அமைச்சர் அன்பழகன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கபிலர் பெயர் சூட்டவேண்டும் என கோரிக்கை... 

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Poet 'Kabilar' name wil be suit for new thiruvalluvar university

 

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவு விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அதன்படி இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி புதிதாக துவங்கப்பட உள்ள பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பழனிசாமி, பல்கலைக்கழகம் துவங்கும்போது அதற்கான பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு துவங்கப்பட இருக்கும் புதிய பல்கலைக்கழகத்திற்கு பாரி மன்னனின் அரசவையில் கவிஞராகவும் அரசரின் உற்ற நண்பராகவும் இருந்த கபிலர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. 

 

அரசன் பாரியின் நாட்டின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வந்தபோது வள்ளல் பாரி தன் இருமகளான அங்கவை, சங்கவை இருவரையும் கவிஞர் கபிலன் இடம் ஒப்படைத்தார். அவர்களை அழைத்துவந்த கபிலர், திருக்கோவிலூர் பகுதியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சிசெய்து வந்த மலையமான் நாட்டு மன்னனுக்கு இருவரையும் மணமுடித்து வைத்தார். அப்படிப்பட்ட கபிலர், திருக்கோவிலூர் நகரை ஒட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் ஒரு குன்று உள்ளது. அந்த குன்றின் மீது ஏறி கபிலர் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை நீத்துள்ளார் என்பது வரலாறு. 

 

தற்போதும் கபிலர் உயிர் நீத்த அந்த குன்று நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டு கபிலர் குன்று என்று அழைக்கப்பட்டு வருகிறது. திருக்கோவிலூர் பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அந்த குன்றை வியப்போடு பார்த்து செல்கிறார்கள். 

 

கபிலருக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் திருக்கோவிலூர் பகுதியை உள்ளடக்கி உருவாக இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு கபிலர் பெயரை சூட்ட வேண்டும் அதுவே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை தமிழ் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். 

 

இதன்மூலம் திருவள்ளுவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சங்கப் புலவர் கபிலரின் பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும் எனவே கபிலர் பல்கலைக்கழகம் என பெயர் வைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் வேறு ஏதேனும் பெயர்களை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டியதில்லை. மேலும் திருக்கோவிலூரில் ஒவ்வொரு ஆண்டும் கபிலர் விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது பெயரே பல்கலைக்கழகத்திற்கு பொருத்தமானது என்று தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

 

 

Next Story

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் சிறப்பே இங்கு பயிலும் மாணவ, மாணவிகளில் மாணவிகளுக்கே இங்கு முக்கியத்துவம். கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாணவிகளுக்கு 55 சதவிதம் ஒதுக்கப்படுகிறது, மாணவர்களுக்கு 45 சதவிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதற்கு காரணம், கிராமங்கள் நிறைந்த பகுதி, பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த கல்லூரி தொடங்கிய போதே விதிமுறைகள் வகுத்து வைத்து தற்போது வரை இந்த அரசு கலைக்கல்லூரியில் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு என்பது 3 மடங்கு அதிகமாக உள்ளதால் மாணவ- மாணவிகள் அதிர்ச்சியாகினர்.

thiruvalluvar university exam fee raised students strike


இந்த கட்டணத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி மாணவ- மாணவிகள் சார்பாக பல்கலைகழக நிர்வாகத்துக்கு வேண்டுக்கோள் விடுத்தனர். அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியான 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் செப்டம்பர் 17ந்தேதி வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். மறியல் செய்த மாணவ- மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தருக்கு தெரியப்படுத்துகிறோம் எனச்சொல்லி வாக்குறுதி தந்ததன் விளைவாக சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் செய்யாரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் இந்த கட்டண உயர்வை கண்டித்து அதன் கீழ் செயல்படும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பல அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.