கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு மரபுவழி விதைத் திருவிழா நடைபெற்றது. 'ஆடிப்பட்டம் தேடி விதை', 'நாடி வருகிறது நாட்டு விதை' என்ற தலைப்பில் நடைபெற்ற இத்திருவிழாவில் முன்னதாக விருத்தாசலத்தின் சிறப்பு பற்றிய தேவார பாடலும், அந்த பாடல் வரிகளுக்கான பொருளுடனும் விழா தொடங்கியது.
இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயற்கை முறையில் விவசாயம் செய்து கொண்டு வரப்பட்ட கலப்பிடமில்லாத மரபு வகை நெல்களான அறுபதாம் குறுவை, கிச்சடி சம்பா, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் மற்றும் தானியங்களும் நாட்டு ரக காய்கறிகளான கொத்தவரை, தம்பட்டை உள்ளிட்டவைகளின் விதைகளும், இயற்கை வழி உரங்களான பஞ்சகாவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் மற்றும் மரபு சிறு தானிய வகைகள், கீரை வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உள்ளடக்கிய அனைத்து விதமான மரபு மற்றும் நாட்டு விதைகள் பொதுமக்களின் பார்வைக்காக 50- க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் இத்திருவிழாவில் முக்கிய பங்காக நெகிழிக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் அமைக்கப்பட்ட அரங்கமும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. இந்த விதை திருவிழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளம் இயற்கை உழவர்கள், தன்னார்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர். மேலும் இளம் இயற்கை உழவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்கள், வேளாண் இயக்குனர்கள் மரபு விதைகளை வழங்கி பாராட்டினர்.