இயற்கை நமக்கு அளித்த அருங்கொடைகளுள் ஒன்று நாவல் பழங்கள் என்றால் மிகை ஆகாது. நாவல் பழங்கள் மட்டுமின்றி அதன் விதை, இலை, மரப்பட்டை என ஒரு மரத்தின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன.
சேலம் என்றாலே மாங்கனி மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் சீசன் காலங்களில் இங்கே நாவல் பழச்சந்தைகளும் களைகட்டுகின்றன. குறிப்பாக, முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலையோரமாக நாவல் பழ வியாபாரம் சக்கை போடு போடுகின்றன.
சேலம் மாவட்டம், ஓமலூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பகுதியில் சாலையின் இருபுறத்திலும் சுமார் 140க்கும் மேற்பட்ட நாவல் பழக்கடைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் பெண்களே இதுபோன்ற நெடுஞ்சாலையோர கடைகளை நடத்தி வருகின்றனர்.
நீலா என்பவர் இதே சாலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வருகிறார். சீசனுக்கேற்ற பழங்களை விற்பனை செய்து வருகிறார். அவர் கூறுகையில், ''சித்திரை முதல் ஆடி மாதம் வரை நாவல் பழ சீசன் இருக்கும். நாட்டு ரகம், ஹைபிரீட் ரகம் என இரண்டு ரக நாவல் பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஹைபிரீட் ரக பழங்கள் பெரிய சைஸிலும், சதைப் பற்றாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதைத்தான் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். நாட்டு ரகத்தை விட விலையும் சற்று குறைவு. உண்மையில் ஹைபிரீட் ரகத்தை விட நாட்டு ரகம்தான் அதிக சுவையாக இருக்கும்'' என்கிறார் நீலா.
சாலையோர பழ வியாபாரிகள் காலை 7 மணிக்கு கடை விரித்தால் இரவு 7 மணிக்குதான் கடையை மூடுகின்றனர். மதிய உணவுக்காக வீட்டுக்குச் செல்வதில்லை. காலையில் வரும்போதே கையோடு மதிய உணவையும் எடுத்து வந்து விடுகின்றனர்.
நாவல் பழத்தின் மகிமைகள் குறித்து நாட்டு மருத்துவர்களிடம் கேட்டபோது, ''நாவல் பழங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறது. நாவல் பழ கொட்டைகளை காய வைத்து பொடித்து, வெந்நீரில் கலக்கிக் குடித்தால் நீரிழிவு பிரச்சனை கட்டுப்படுகிறது. நாவல் பழங்களில் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி வைட்டமின் ஆகிய தாது சத்துகள் இருக்கின்றன. இந்த பழங்களை சாப்பிட்டு வர கல்லீரல் பிரச்சனைகளுக்கும், சிறுநீர்ப்பை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது'' என்கிறார்கள்.
நெடுஞ்சாலையோர கடை என்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் கார், இருசக்கர வாகனங்களை கடை முன்பு நிறுத்துவதால் விபத்துகளை சந்திக்க நேரிடுகின்றன. அதனால் டோல்கேட் ஒப்பந்ததாரர்கள் சில நேரம், சாலையோரங்களில் கடை போடக்கூடாது என்று கெடுபிடி காட்டுவதாகவும், எடை கற்களை எடுத்துச் சென்று விடுவதாகவும் புலம்புகிறார்கள் சாலையோர வியாபாரிகள். அதுபோன்ற நாள்களில் மீண்டும் காவல்துறை அனுமதி பெற்று கடை நடத்த இரண்டு நாள்கள் ஆகிவிடுகிறது என்றும், 5000 ரூபாய் வரை பொருள்கள் நட்டம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
வெண்ணிலா என்ற பழ வியாபாரி கூறுகையில், ''ஆந்திரா ரக நாவல் பழங்களை மொத்த விலையில் கிலோ 250 ரூபாய்க்கு வாங்குகிறோம். சில்லறை விலையில் கால் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். 10 கிலோ நாவல் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் வாடிக்கையாளர்கள் ருசி பார்ப்பதாகச் சொல்லி எப்படியும் 2 கிலோ பழத்தை சாப்பிட்டு விடுவார்கள். ஒரு கிலோ பழம் டேமேஜ் ஆகிவிடும். இந்த இழப்பை எல்லாம் சரிக்கட்டிதான் விற்பனை விலையை நிர்ணயிக்கிறோம். நாவல் பழங்கள் மட்டுமின்றி பேரீச்சம் பழங்கள், ரம்புட்டான் பழங்களும் விற்பனை செய்கிறோம்'' என்கிறார்.
700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒரு நாள் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் சாலையோர பழ வியாபாரிகள்.
நீலா, வெண்ணிலா போன்ற உழைக்கும் பெண்கள், குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைப்பதில் அவர்களின் கணவர்களை விடவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் எனலாம்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் இதுபோன்ற பழங்களை வாங்கி, பெரு முதலாளிகளின் கல்லாவை நிரப்புவதைக் காட்டிலும், சாலையோர சிறு வியாபாரிகளிடம் வாங்குவதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தினரின் வீடுகளில் அன்றாடம் அடுப்பு எரிவதற்கு நாமும் துணை நிற்க முடியும்.