சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்துகள், வெள்ளிக்கிழமை (மே 7) முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று மருத்துவமனை முதல்வர் அத்தகவலை மறுத்துள்ளதால் நோயாளிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தால் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் நேற்று (06/05/2021) ஒரே நாளில் 614 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பொதுவெளியில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்துகள், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (07/05/2021) முதல் விற்பனை செய்யப்படும் என்றும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பாதுகாப்பு தேவை என்றும் மருத்துவமனை முதல்வர் முருகேசன் தரப்பில் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் கேட்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவலும் சமூக ஊடகங்களில் வெளியானது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பலரும் சேலம் அரசு மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கினர். ஆனால், அங்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான அறிகுறிகள் இல்லாததால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் குழப்பம் அடைந்தனர்.
இது தொடர்பாக நாம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் அலைபேசி வழியே தொடர்புகொண்டு கேட்டபோது, ''தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம்தான் (டிஎன்எம்எஸ்சி) ரெம்டிசிவிர் மருந்துகளை விற்பனை செய்கிறது. நாங்கள் அதற்கான இடத்தை மட்டுமே ஒதுக்கிக்கொடுக்கிறோம்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மருந்து விற்பனை எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். மற்றபடி, மருந்தின் விலை, மருந்து வாங்க வருவோர் என்ன சான்று கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை நீங்கள் டிஎன்எம்எஸ்சியிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதுபற்றி தெரியாது,'' என பட்டும்படாமலும் பேசினார்.
முன்னதாக, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் பெயரில் இன்றுமுதல் ரெம்டிசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடியோடு மறுத்தார். அவர் பெயரில் வெளியான அறிக்கையை அவருக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து விளக்கம் கேட்டபோது, மருந்து விற்பனை தொடங்கிய பிறகு தெரிவிக்கிறோம் என்று பதில் அனுப்பினார்.