காடையாம்பட்டி அருகே, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நடுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ராஜமாணிக்கம் (50) என்பவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மூன்று மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதாகச் சொல்லி ஆசிரியர் ராஜமாணிக்கம் அவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களிடம் தன்னைக் காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், அவர்களின் உறவினர்களும் அக். 30ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பா, ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் இந்திரா மற்றும் காவலர்கள் பள்ளிக்குச் சென்று புகார் அளித்த மாணவிகளிடம் விசாரித்தனர். புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, ஆசிரியர் ராஜமாணிக்கத்தை தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட பின்னர், ஆசிரியர் ராஜமாணிக்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன். மன்னித்து விடுங்கள் என்று கதறி அழும் குரல் பதிவை, பாதிக்கப்பட்ட தரப்பினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின்போதும் ராஜமாணிக்கம், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான ராஜமாணிக்கத்தின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி ஆகும். அவருக்குத் திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று மகளுடன் தனியாக வசிக்கிறார்.
இதையடுத்து ராஜமாணிக்கம் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இடமாறுதல் பெற்று, காடையாம்பட்டி அரசுப் பள்ளிக்கு வந்தார். இங்கு நாச்சனம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து, பள்ளிக்குச் சென்று வருவது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அவர் வார விடுமுறை நாள்களிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். அவர் வேறு எந்தெந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் காடையாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.