திருப்பூர் மாவட்டத்தில் அரியவகை நவபாஷாண சிலை என்று வேதிப்பொருள் பூசப்பட்ட சிலையை 14 லட்சத்திற்கு விற்கமுயன்ற குறி சொல்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குறி சொல்லும் கருப்பையா என்ற நபர் தன்னிடம் அரிய வகை நவபாஷாண விநாயகர் சிலை இருப்பதாகவும் அதன் மேல் பாலை ஊற்றினால் சிலை பச்சை நிறமாக மாறும். அந்த பாலை குடித்தால் நோய்நொடி வராது என அவரது மருமகன் அப்பாசேட்டு என்பவரிடம் கூறியுள்ளார்.
இதனை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா என்பவரிடம் விற்பதற்காக அப்பாசேட்டு 14 லட்சம் ரூபாய் விலைபேசியுள்ளார். அப்பொழுது சிலையை வாங்கிப்பார்த்த ராஜா, அதனை சுரண்டி பார்க்கையில் சிலையின் மீது எதோ ஒருவகையான ரசாயனம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து ராஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலி நவபாஷாண சிலையோடு அப்பாசேட்டுவை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக குறிகாரர் கருப்பையாவை தேடி வருகின்றனர்.