திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது, ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவர் அவதூறாகப் பேசினார். இதனால் கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை, சைபர் கிரைம் காவல்துறையினர், தேடி வந்தனர். இந்த நிலையில், அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுச்சேரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, அவரை சென்னை அழைத்து வந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, கனல் கண்ணனை வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.