சிதம்பரம் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் நலச்சங்கம், நுகர்வோர் கூட்டமைப்பு, வர்த்தக சங்கம் மற்றும் அனைத்துக் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு செய்திருந்தனர்.
இதனை அறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரையும் அழைத்து அவரது அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சிதம்பரம் டிஎஸ்பி ரூபன்குமார்(பொறுப்பு), வட்டாட்சியர் செல்வகுமார், ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன், முதன்மை வர்த்தக ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார், இருப்புப் பாதை பாதுகாப்புப் படை ஆய்வாளர் சுதீர்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ்மொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி விரைவு வண்டி மைசூர் - மயிலாடுதுறை விரைவு வண்டி சிதம்பரம் வரை நீட்டிக்கவும், அதேபோல் அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம் - செங்கோட்டை, சென்னை எழும்பூர் - காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லத் திருச்சி கோட்ட அலுவலகத்திலிருந்து சென்னை முதன்மைப் பயணிகள் போக்குவரத்து செயலாளருக்கு ஒரு மாத காலத்திற்குள் கருத்துரு அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.