சேலம் அருகே நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு ரவுடிகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் மோகன் (29). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் புறநகர் டிஎஸ்பி உமாசங்கர் மேற்பார்வையில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
விசாரணையில், திருச்செங்கோடைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து மோகனை தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது. அவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சேலம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த மாவீரன் என்கிற பெரிய வீரன் (35), சூரமங்கலத்தைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (37), திருச்செங்கோடைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (35) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள்தான் மோகனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. திருச்செங்கோடைச் சேர்ந்த சுரேஷ் ஆலோசனையின்பேரில், அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் தலைமையில் 8 பேர் சேர்ந்து, மோகனை வெட்டிக் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, பெரிய வீரன், மணிகண்டன், மகுடேஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை புதன்கிழமை (அக். 9) சேலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாகராஜ் என்ற ரவுடி பவானி நீதிமன்றத்திலும், செல்வம் என்ற ரவுடி நெல்லை நீதிமன்றத்திலும் வியாழக்கிழமை (அக். 10) சரணடைந்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.