சேலத்தில், பெண்களைப் பலவந்தப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பெண் உள்பட ஐந்து பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி இரும்புதலை ஏட்டுக்காட்டைச் சேர்ந்தவர் செல்வா என்கிற செந்தில்குமார். சேலம் 5 சாலை அருகே, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்துவந்துள்ளார்.
அந்த வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சேலம் மாநகரக் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை மீட்டனர். செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.
பூமிநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர், ரெட்டியூர் திருமால் நகரில் ஒரு வீட்டில் மசாஜ் மையம் என்ற பெயரில் விபச்சாரத் தொழில் செய்துவந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி கார்த்திகா தேவியை கைது செய்த காவல்துறையினர், அவருடைய மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருவரையும் மீட்டனர்.
அதேபோல அழகாபுரம் புவனேஸ்வரி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரத் தொழில் செய்துவந்த ராஜ்குமார் என்பவரையும் கடந்த மாதம் 19ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட நான்கு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஞானவேல், கன்னங்குறிச்சி எல்பி செட்டி தெருவைச் சேர்ந்த சைமன் ஆகியோரும் விபச்சாரத் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திகாதேவி, ராஜ்குமார், ஞானவேல், சைமன், செல்வா என்கிற செந்தில்குமார் ஆகியோர் அப்பாவி பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தியும், தனக்கு உடன்படாத பெண்களைத் துன்புறுத்தியும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. கைதான அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், ஐந்து பேரும் விபச்சாரத் தொழில் குற்றவாளி என்ற பிரிவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கார்த்திகாதேவி, கோவை பெண்களுக்கான தனி சிறையிலும், மற்ற நான்கு பேரும் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.