சேலத்தில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் ஜான்சன்பேட்டை கன்னாங்காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் பரசுராமன் (23). கடந்த ஜன. 25ம் தேதி, பரசுராமனும் அவருடைய கூட்டாளி கவுதம் என்பவரும், மணக்காடு பிள்ளையார் நகர் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த வினோத் என்பவரை வழிமறித்தனர். கத்தி முனையில் மிரட்டிய அவர்கள், வினோத்துடன் வண்டியில் அமர்ந்திருந்த அவருடைய தாயார் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அவர்கள் இருவரையும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் பரசுராமன் மீது கடந்த 2018ம் ஆண்டு பிரதாப் என்பவரை கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தியதாகவும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டிற்குள் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 7.5 பவுன் நகையைப் பறித்துச் சென்றதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாலும், பிணையில் வெளியே வந்து மீண்டும் சமூகத்தை அச்சுறுத்தும்படியான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், காவல்நிலையத்தில் அவர் மீது போக்கிரித்தாளும் (ஹிஸ்டரி ஷீட்) பராமரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, ரவுடி பரசுராமனை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (பிப். 7) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதற்கான ஆணையை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரசுராமனிடம் நேரில் சார்வு செய்யப்பட்டது.