சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியக்குழுவின் முதல் கூட்டத்திலேயே, ஆணையரை உறுப்பினர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டு தெறிக்கவிட்டனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தின் முதல் கூட்டம், ஒன்றியக்குழுத் தலைவர் மாரியம்மாள் தலைமையில் சனிக்கிழமை (பிப். 7) நடந்தது. ஓமலூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 2019&2020ம் நிதியாண்டுக்கான வரவு, செலவு கணக்கு அறிக்கை வாசித்துக் காண்பிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், நிதிநிலை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த ஒன்றியக்குழு ஆணையர் கருணாநிதி, ''காடையாம்பட்டி ஒன்றிய பகுதிகளில் 1.10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 1.67 கோடி ரூபாயில் புதிய பணிகளை மேற்கொள்ள உத்தரவு பெறப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் ஒன்றியத்தில் 3.32 கோடி ரூபாய் கடன் உள்ளது,'' என்று கூறினார். ஆணையர் இவ்வாறு கூறியதற்கு, சிறிய ஒன்றியத்திற்கே இவ்வளவு கடன்களா? என்று உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், ''இவ்வளவு தொகை கடன் இருப்பதாகச் சொன்னால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு எப்படி நலத்திட்டப் பணிகளை தொடர்ந்து செய்ய முடியும்? இது, மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது,'' என்றார்.
அதன்பின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சமுராய் குரு பேசும்போது, ''உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லையா? எதற்காக பொது நிதியை தேர்தல் செலவு கணக்கில் காட்டியுள்ளீர்கள்? இதற்கு எப்படி அனுமதி கொடுக்க முடியும்?,'' என்றார்.
அதற்கு பதில் அளித்த ஆணையர் கருணாநிதி, ''அவசர காலத்தில் பொது நிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் செலவுக்கான நிதி ஒதுக்கப்படும்போது, அந்த நிதி பொது நிதி கணக்கில் சேர்க்கப்படும்,'' என்றார். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.