சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலர் கடற்கரை பகுதியில் கட்டுப்பாட்டை மீறி குளிக்கும் போது காணாமல் போவதும் மற்றும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடல் அலையில் சிக்குபவர்களை ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கக் கடலோர பாதுகாப்பு குழுமம் திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இக்குழுமம் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளது. மெரினா கடற்கரையில் அலையில் சிக்குபவர்களை மீட்க, ட்ரோன்களை பயன்படுத்தி விரைவாக மிதப்பான்களை கொடுத்து அவர்களை முதற்கட்டமாக நீரில் மூழ்காமல் தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மெரினா கடற்கரையில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையைக் கொடுக்கவும், கண்காணிப்பு கோபுரங்களை அதிகரிக்கவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. 50 காவல்படை காவலர்களுக்கு நீச்சல் பயிற்சியளித்து பணியமர்த்தவும், 12 மீனவ இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் உயிர் காக்கும் பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது கடலோர பாதுகாப்பு குழுமம்.