சேலம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை மாமனார் கோடரியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (48). சொக்கநாதபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமுதா (45). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உலிபுரத்தில் தனக்குச் சொந்தமான தோட்டத்திலேயே வீடு கட்டி அறிவழகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை தந்தை பழனி (63), தாய் தொட்டம்மாள் ஆகியோர் மட்டும் ஊருக்குள் தனியாக ஒரு வீட்டில் இருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 18) காலை அறிவழகன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். அன்று மதியம், தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு நேரில் சென்ற அறிவழகனின் தந்தை பழனி, தனது மருமகளை கோடரியால் வெட்டிக் கொன்று விட்டதாகக் கூறி சரணடைந்தார். மருமகளின் சடலம் அவருடைய தோட்டத்து வீட்டில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே, அமுதா தலை, கை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் கோடரியால் வெட்டப்பட்ட நிலையில், அமுதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
அமுதாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த பழனியை காவல்துறையினர் கைது செய்தனர். பழனி காவல்துறையில் அளித்த வாக்குமூலம்:
என்னுடைய மருமகள் அமுதாவை அடைய வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை இருந்து வந்தது. இதுபற்றி பலமுறை அவரிடம் நேரிலும் சொல்லி விட்டேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அவர் பிடிகொடுக்காமல் ஒதுங்கி ஒதுங்கிப் போனார். இதற்கிடையே, அவருக்கு வேறு ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அதை நான் நேரிலும் பலமுறை பார்த்து இருக்கிறேன். எனக்கு மட்டும் ஒத்துழைக்க மறுக்கிறாளே என்று ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பவத்தன்று தனியாக இருந்த அமுதாவை அடைய முயற்ச்சித்தேன். திமிறிக்கொண்டு விலகிச் சென்றதோடு, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி விடுவேன் என்றும் மிரட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த கோடரியால் அவரை கண்மண் தெரியாமல் வெட்டிக் கொன்றேன். அதன்பிறகுதான் பெண்ணாசையில் தப்பு செய்துவிட்டோமே என்று நினைத்து சரணடைந்தேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து பழனியை ஆத்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.