Skip to main content

 நான் மத்தியில் பல ஆண்டுகாலம் உள்ளவன்; ஜெயக்குமார் அவரது சொந்த கருத்தை கூறியிருக்கலாம் - தம்பிதுரை பேட்டி

Published on 08/09/2018 | Edited on 09/09/2018
thiruma


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை  தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் கரூர் தொகுதி எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு தொகுதிப் பக்கம் தம்பிதுரை சென்றார்.

 

 பாரப்பட்டி பொறுவாய் பூதக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது பாராப்பட்டி கிராமத்தில் திரண்ட பொதுமக்கள் பல மாதங்களாக குடிக்க தண்ணி இல்ல அவதிப்படுறோம் இப்ப தான் எங்களை பார்க்க தோனுச்சா என்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவர்களை சமாளித்து உடனே குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதாக சொன்ன பிறகு முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. 

 

 இந்த நிலையில் பொறுவாய் கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த  துணை சபாநாயகர் தம்பிதுரை..  திமுகவும் பாஜகவும் தற்போது இணைந்து வருகிறது. ஏற்கனவே அவர்கள் இருவரும் கூட்டணியில் இருந்தவர்கள் தான்.  கலைஞர் இறந்த பிறகு அதிமுக எவ்வளவோ உதவிகள் செய்தது. ஆனால் நினைவேந்ததல் நிகழ்ச்சிக்கு எங்களை  அழைக்காமல் பாஜகவை அழைத்தது திமுக. தற்போது தேர்தல்  நெருங்கி வருவதால் திமுகவும் பாஜகவும் நெருங்கி வருகிறது என்பதை காட்டுகிறது.
அழகிரி பேரணியை மறைப்பதற்காக தான் குட்கா விவகாரத்தை கையில் எடுத்து சிபிஐயை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு  டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது. அதிமுகவை பழிவாங்கவும் அரசிற்கு களங்கம் ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்கிறது. 


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தொகுதியை மட்டுமல்லாமல் தமிழக சுகாதாரத்துறையையே இந்தியாவில் முதன்மை மாநிலமாக ஆக்கியுள்ளார். அவரது வளர்ச்சி பொறுக்காமல் சிலர் பழிவாங்கும் எண்ணத்தில் குட்கா விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்றார்.

 

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் 2011ம் ஆண்டு முதல் குட்கா ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை.. ஜார்ஜ் தான் பதவியில் இருந்த போதே இந்த கருத்தை தெரிவித்து இருந்தால்; வரவேற்று இருக்கலாம். ஓய்வு பெற்ற பின்னர் இந்த கருத்தை அவர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும், இரட்டை இலை எங்களிடம் இருப்பதால் இடைத்தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 வெற்றி பெறும். 


சிபிஐ ரெய்டு குறித்து ஜெயக்குமார் கூறும் கருத்திற்கும் தாங்கள் கூறும் கருத்திற்கும் வேறுபாடு உள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு.. நான் மத்தியில் பல ஆண்டுகாலம் உள்ளவன். ஜெயக்குமார் அவரது சொந்த கருத்தை கூறியிருக்கலாம் என்றார்.


                

சார்ந்த செய்திகள்