ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஓடும் காவேரி ஆறு பல சிறப்புக்களை கொண்டது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து இங்குள்ள காவேரி ஆற்றில் குளித்து விட்டு அருகே உள்ள மகுடேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில மக்களும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வந்து காவேரியில் நீராடி செல்வார்கள். அதே போல் தமிழகம் முழுக்க உள்ள முருக பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை, காவடி எடுத்துச் செல்லும் போது கொடுமுடி காவேரி ஆற்றில் நீராடி மகுடேஸ்வரரை கும்பிட்டு விட்டு பழனி நோக்கி செல்வார்கள்.
இப்படி பல லட்சக்கனக்கான மக்கள் வந்து செல்லும் இந்த காவேரி ஆற்றில் தான் ஏராளமான மனித உயிர்கள் அநியாயமாக பறிபோகிறது. ஆம், இந்த காவிரி அற்றில் ஆழம் தெரியாமல் அல்லது சுழற்சி எங்கே உள்ளது? ஆழமான குழிகள் இருக்கும் இடம் எது? என தெரியாமல் ஆற்றில் இறங்கி அவ்வப்போது பலர் பலியாகி வருகிறார்கள்.
அதே போல் கடந்த வருடம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக காவேரி ஆற்றில் ஆங்காங்கே ஆழமான பகுதிகள் ஏற்பட்டு மரண குழிகளாக இருக்கிறது. இதனால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் பலர் காவிரிஆற்றில் நீராடும் போது நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் கொடுமுடி போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப் பட்டிருந்தது. ஆனாலும் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் குறையவில்லை. இதையடுத்து ஆற்றில் மணல்மேடு பகுதியில் பக்தர்கள் நீராடும் வகையில் சிறிய ஆழமற்ற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. நீரில் ஆழமான பகுதிக்கு செல்பவர்கள் தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் சவுக்குக் கட்டைகளை கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் குறையவில்லை.
கொடுமுடிக்கு வரும் பக்தர்களே காவிரி ஆறு புனித நீர் என்று நம்பி நீராடுகிறீர்கள். ஆனால், உயிர் முக்கியம். கொடுமுடிக்கு வந்தால் காவிரி ஆற்றில் உஷாராக இருக்கவும்.