தமிழகத்தில், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், ஸ்மைல் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலர் உணவுப்பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை விலையின்றி செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.
இதனால் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்டு வந்த மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்குவது தடைப்பட்டது. தற்போது அவர்களுக்கு சமைத்த உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருளாக அதாவது அரிசி, பருப்பு ஆகியவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சத்துணவுக் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் உலர் உணவுப்பொருள்களை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,835 அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள், ஸ்மைல் பள்ளிகளில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படித்து வரும் 1,00212 மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா 3.100 கிலோ அரிசியும், 1.200 கிலோ பருப்பும் வழங்கப்படுகிறது.
அதேபோல், 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயின்று வரும் 77,501 மாணவ, மாணவிகளுக்கு தலா 4.650 கிலோ அரிசியும், 1.250 கிலோ பருப்பும் என மொத்தம் 1,77,713 பேருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) முதல் அவரவர் படித்து வரும் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது.
இந்த உலர் உணவுப் பொருள்களை எந்த நாள், எந்த நேரத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் அறிவிக்கப்படும். அந்த விவரங்களில் குறிப்பிட்டுள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உரிய நாளன்று நேரில் சென்று உலர் உணவுப்பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளிக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதோடு சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு கைகளைக் கழுவிய பிறகு வர வேண்டும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.