சேலம் மாநகராட்சியில் போலி சம்பள பட்டியல் மூலம் 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த துப்புரவு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை பணியிடைநீக்கம் செய்தும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் வெங்கடேஷ் என்கிற வெங்கடேஷ்குமார். இவர், சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். என்றாலும், கொண்லாம்பட்டி மண்டல அலுவலகத்தில் எழுத்தர் பிரிவில் ஆள் பற்றாக்குறையால், கடந்த பத்து ஆண்டுகளாக அவர் எழுத்தர் பணிகளில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நடப்பு 2018-2019ம் நிதியாண்டிற்கான தணிக்கைப்பணிகள் நடந்தபோது ஊழியர்களுக்கான சம்பள 'பில்' பட்டியல், காசோலைகளில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சம்பள பட்டியல், சம்பள காசோலைகளை மாதந்தோறும் இந்தியன் வங்கிக்கு கொண்டு செல்லும் பணிகளில் வெங்கடேஷ்குமார்தான் ஈடுபட்டு வந்தார். அதனால் அவர்தான் சம்பள பட்டியலில் கோல்மால் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக கணக்காளர் வெங்கடேசன், உதவியாளர் மாதவன் ஆகியோர் வெங்கடேஷ்குமாரின் வீட்டுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தியதில், அவர் சம்பள பட்டியலையும், காசோலைகளிலும் திருத்தம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதை ஒப்புக்கொண்டார். ஆவணங்களை ஆய்வு செய்ததில் வெங்கடேஷ்குமார் அவருடைய தம்பி மோகன் என்கிற மோகன்குமார், தம்பி மனைவி பிரபாவதி, அவருடைய தாயார் விஜயா ஆகியோரை மாநகராட்சி ஊழியர்கள்போல போலி ஆவணங்களை தயாரித்தும், அவர்கள் பெயர்களில் மாதந்தோறும் சம்பளம், கிராஜூவிட்டி தொகை ஆகியவற்றை வங்கியில் இருந்து எடுத்துள்ளார். இவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொகையில் அவர் கலைஞர் நகரில் 40 லட்சம் ரூபாய்க்கு புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.
வெங்கடேஷ்குமார் எப்படி மோசடி செய்தார், மோசடி தொகை எவ்வளவு என்பது குறித்து நக்கீரன் இணைய இதழ், முதன்முதலில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்பிறகே கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு வெங்கடேஷ்குமார் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவில், செப். 14ம் தேதி புகார் அளித்தார். ஆய்வாளர் விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்து, அன்று இரவு வெங்கடேஷ்குமார் மற்றும் அவருடைய தம்பி மோகன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவருடைய தாயார், தம்பி மனைவி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
காவல்துறை விசாரணையின்போது வெங்கடேஷ்குமார், இந்த மோசடியில் மேலும் இரு ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும், மோசடியை கண்டுகொள்ளாமல் இருக்க தான் ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இது, மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, வெங்கடேஷ்குமாரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் வெங்கடேஷ்குமார் பணியாற்றிய காலங்களில் அனைத்து சம்பள பில் பட்டியல், காசோலைகளையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த மோசடி விவகாரம் மேலும் பூதாகரமாக வெடிக்கும் என ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.