முன்பெல்லாம் ஒருவர் மீதான வெறுப்பையும் கோபத்தையும் நேரடியாகக் காட்டுவர். அல்லது, அந்த நபர் உணரும் வகையில் ஜாடைமாடையாகப் பேசுவர். இன்னொரு பாணியும் உண்டு. அதுதான் அடுத்தவரிடம் புறங்கூறிப் பேசுவது. இந்த மூன்று வகைப் பேச்சும் இப்போது அதிகமாக இல்லை. இருக்கவே இருக்கிறது வலைத்தளம். வாட்ஸப்போ, ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ, ஏதோ ஒன்றில், தங்களின் கோபத்தை வார்த்தைகளாகவோ, மீஸ்களாகவோ வெளியிட்டுவிட முடியும். சில வலைத்தளங்கள், தங்களுக்கென்று நெறிமுறைகளை வகுத்திருந்தாலும், அதையெல்லாம் மீறுகின்ற அசாத்திய துணிச்சல் நம்மில் பலருக்கும் உண்டு. அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல், இந்திரா நகரைச் சேர்ந்த முனியசாமி.
டிடிவி தினகரனின் அ.ம.மு.க. திருத்தங்கல் நகர இளைஞரணி பொறுப்பிலுள்ள ஆட்டோ முனியசாமிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது கோபமோ கோபம். தேர்தல் களத்தில், கே.டி.ராஜேந்திரபாலாஜியும், டிடிவி தினகரனும் அரசியல் ரீதியான தாக்குதல் பேச்சை மேடைகளில் எடுத்துவிடுகின்றனர். முனியசாமியைப் பொறுத்தமட்டிலும், கே.டி.ராஜேந்திரபாலாஜியைக் காட்டிலும் டிடிவி தினகரனே உசத்தி என்ற எண்ணம் கொண்டவர். அதனால், கே.டி.ராஜேந்திரபாலாஜி, டிடிவி தினகரனின் பேச்சுக்கு பதிலடி தருவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கோபத்தில், அமைச்சரின் உயிரையும் அவருடைய துறையையும் சம்பந்தப்படுத்தி, அநாகரிகமாக முகநூலில் பதிவு போட்டிருக்கிறார்.
அமைச்சரைத் திட்டி வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் யார் யார் என்பதைக் கண்காணிப்பதற்கென்றே அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளது. குறிப்பிட்ட அந்தப் பதிவும், ‘ஆட்டம்.. அடங்காத கூட்டம்’ என்பதுபோன்ற பதிவுகளும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜனின் கண்களில் பட, முனியசாமியிடம் நேரில் சென்று கேட்டிருக்கி|றார். இந்நிலையில், இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு, பாண்டியராஜனை முனியசாமி தாக்கினாராம். கொலை மிரட்டலும் விடுத்தாராம். பிறகென்ன? பாண்டியராஜன் அளித்த புகாரை விசாரித்து, சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் முனியசாமியைக் கைது செய்திருக்கின்றனர்.
அமமுக தரப்பிலோ, பொய்ப் புகாரில்
முனிசாமியைக் காவல்துறை கைது செய்திருக்கிறது என்று தங்களின் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.