சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாஜககூட்டணியில் இடம் பெற்ற பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் மனோஜ்குமார் உள்பட 25 பேர் போட்டியிட்டனர். அதிமுகவை விட திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 70,357 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி அடைந்தார். அவர் மொத்தம் 566085 வாக்குகள் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 4,95,728 வாக்குகளும், பாமகவின் அண்ணாதுரை 1,27,139 வாக்குகளும், நாதகவின் மனோஜ்குமார் 76,207வாக்குகளும் பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 12,500 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதை ஒரு பொழுதுபோக்காக கருதும் நபர்களைக் கட்டுப்படுத்துவதற்காக இதுபோன்ற டெபாசிட் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
தேர்தலில் பதிவான செல்லுபடியான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களுக்கு அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டு விடும். இந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறாதவர்களுக்கு டெபாசிட் கட்டணம் திருப்பித்தரப்பட மாட்டாது. மேலும், காப்புத்தொகையை இழந்தவர்கள் படுதோல்வி அடைந்தவர்களாகவும் கருதப்படுவர். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 950 செல்லுபடியான வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆறில் ஒரு பங்கான 21,4992 வாக்குகளும், அதற்கு மேலும் பெற்ற வேட்பாளர்களுக்கு அவர்களின் காப்புத்தொகை திருப்பி அளிக்கப்படும்.
ஆனால் சேலம் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமாரும் செல்லுபடியான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவானவாக்குகளைப் பெற்றதால் அவர்களின் டெபாசிட் தொகை பறிபோனது. இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்