சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலத்திலிருந்து விமான சேவையைத் தொடங்குவதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு ட்ரூஜெட் விமானம் புறப்பட்டது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, வெல்லமண்டி நடராசன், எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் பயணித்தனர். 9.40 மணி அளவில் அந்த விமானம் சேலம் விமான நிலையம் சென்றடைந்தது. அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலத்தில் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் கடந்த 1993ம் ஆண்டில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் 2010ம் ஆண்டில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் மீண்டும் இன்று முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு விமான சேவையை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பயணிகளுக்கு டிக்கெட் நகலை வழங்கி சேலம்-சென்னை இடையேயான விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலத்தில் காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு காலை 11.50 மணிக்கு வந்தடையும். இதேபோன்று சென்னையில் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.